hello world!
hello world!
Uncategorized

தலசீமியா

This article is for health education purposes only and does not replace professional medical advice, diagnosis, or treatment. If you have a personal health concern, please consult a qualified doctor or healthcare provider.

தலசீமியா பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

ஜாதகப் பொருத்தத்திற்கு முன், தலசீமியா பொருத்தத்தைப் பார்ப்போம்.

உங்கள் குழந்தையை தலசீமியாவிலிருந்து காப்பாற்றுவோம்.

உங்கள் இரத்தத்தின் மூலம் நாளை பிறக்கும் குழந்தை தலசீமியா நோயாளியாவதற்கான அபாயத்திலிருந்து காப்பாற்றுவோம்! திருமணத்திற்கு முன்பு, தலசீமியா பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

உங்கள் நுரையீரலுக்குள் நுழையும் ஒட்சிசனை உடல் முழுவதும் விநியோகிப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள செங்குருதிக் கலங்கள் ஆகும். செங்குருதிக் கலங்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஈமோகுளோபின் ஆகும். தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஈமோகுளோபினில் உள்ள குளோபின் எனப்படும் புரத உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தலசீமியா நோயாளியின் செங்குருதிக் கலங்கள் வேகமாக அழியத் தொடங்குகின்றன. ஒரு சாதாரண மனிதரின் செங்குருதிக் கலத்தின்   ஆயுட்காலம் நான்கு மாதங்கள் என்றாலும், தலசீமியா நோயாளியின் உடலில் அது, ஒரு மாதம் வரை குறைகிறது.

தலசீமியா நோய் பாதித்த ஒரு குழந்தையின் நோய் அறிகுறிகள், அவரது வாழ்க்கையின் முதல் வருடத்திற்குள்ளேயே தோன்றிவிடும்.

தலசீமியா நோயின் அறிகுறிகள் யாவை?

• செங்குருதிக் கலங்கள் அழிவதால் உடலில் இரத்தம் குறைதல் (இரத்த சோகை) ஏற்படுகிறது. குழந்தை வெளுத்துப்போய் காணப்படும். சுறுசுறுப்பு குறையும். சில நேரங்களில் பால் குடிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்படும்.

• கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்குவதால் வயிறு முன்னோக்கி வீங்கி வரும். குழந்தை மஞ்சள் நிறமாக மாறும்.

• என்பு மச்சை விரிவடைவதால் முகத்தின் அமைப்பு மாறுகிறது.

• செங்குருதிக் கலங்கள் அழிவதாலும், அடிக்கடி இரத்தம் செலுத்துவதாலும் உடலில் தேங்கும் இரும்புச் சத்து, கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளிலும், கணையம், பிட்யூட்டரி போன்ற ஓமோன் சுரக்கும் சுரப்பிகளிலும் படிவதால் அந்த உறுப்புகளின் செயற்பாடு குறைகிறது.

• குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அடிக்கடி எளிதாக நோய்வாய்ப்பட நேரிடும்.

தலசீமியா நோய் எவ்வாறு ஏற்படுகிறது?

ஒரு குழந்தை உருவாவது தாயினதும் தந்தையினதும் மரபணுக்கள் (genes) இணைவதனாலாகும். நமது தோற்றம் மற்றும் உடல் செயற்பாடுகள் அனைத்தும் பெற்றோரிடமிருந்து நமக்குக் கிடைக்கும் மரபணுக்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு மரபணு அசாதாரணமானதாக இருந்தால், அதற்குரிய நோய் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. தலசீமியா  நோய் ஏற்படுவதும் இவ்வாறான ஒரு அசாதாரண தலசீமியா மரபணுவினாலேயே ஆகும்.

உங்களுக்கு தலசீமியா நோய் இல்லாதிருந்தாலும், உங்களது உடலில் அந்த அசாதாரண தலசீமியா மரபணு இருந்தால், உங்கள் குழந்தை உருவாகும்போது உங்களிடமிருந்து அந்த மரபணு குழந்தைக்குக் கடத்தப்படலாம். இந்த நிலையில் நீங்கள் 'நோய்க்காவி' (Carrier) என அழைக்கப்படுவீர்கள்.

தாய் தந்தை இருவருமே நோய்க்காவிகளாக இருந்தால், அதாவது இருவரிடமும் அந்த அசாதாரண தலசீமியா மரபணு இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தலசீமியா நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. அதற்குக் காரணம், தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரிடமிருந்தும் அந்த அசாதாரண மரபணு குழந்தைக்குக் கிடைத்து, குழந்தை நோயாளியாக மாறுவதற்கு 25% வாய்ப்பு இருப்பதே ஆகும்.

பெற்றோரில் ஒருவரிடமிருந்து அசாதாரண மரபணுவும், மற்றவரிடமிருந்து சாதாரண மரபணுவும் கிடைத்தால், அக்குழந்தை ஒரு நோய்க்காவியாக மாறும்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நீங்கள் ஒரு தலசீமியா நோய்க்காவி இல்லை என்றால், அதாவது உங்களிடம் அசாதாரண தலசீமியா மரபணு இல்லை என்றால், நீங்கள் ஒரு தலசீமியா நோய்க்காவி அல்லது தலசீமியா நோயாளியைத் திருமணம் செய்தாலும், உங்கள் குழந்தைக்கு தலசீமியா நோய் ஏற்படாது.

எனவே, பெற்றோர் இருவரில் ஒருவர் நோய்க்காவி இல்லை என்றாலும் கூட, குழந்தைக்கு தலசீமியா நோய் ஏற்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை.

தலசீமியா நோயைத் தடுப்பது எப்படி?

திருமணத்திற்கு உங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, இரத்தப் பரிசோதனை மூலம் நீங்கள் இந்நோய்க்கான காவி (carrier) தானா என்பதை அடையாளம் காணுங்கள். நீங்கள் ஒரு காவியாக இருந்தால் உங்களுக்கு இளஞ்சிவப்பு (Pink) நிற அட்டையும், காவியாக இல்லாவிட்டால் பச்சை நிற அட்டையும் வழங்கப்படும்.

உங்களுக்கு இளஞ்சிவப்பு நிற அட்டை கிடைத்தால், அதேபோல் இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருக்கும் மற்றொருவரைத் திருமணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது இலங்கை மக்கட் தொகையில் 3% தலசீமியா நோய்க் காவிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இந்நோயாளிகள் அடையாளம் காணப்பட்டாலும், வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நோயாளர்கள் அதிகளவில் பதிவாகின்றனர்.

திருமணத்திற்கு முன் தலசீமியா இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம், தலசீமியா நோயைத் தடுப்பதற்கான பிரஜா கடமையை நிறைவேற்றுவோம்.

நோய் பரிசோதனைக்குத் தேவையான விபரங்களை பின்வரும் தொலைபேசி எண்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்:

• தலசீமியா சஹன பியச (தலசீமியா சிகிச்சை பிரிவு), ராகம - 011 2 959 642

• தலசீமியா மத்திய நிலையம், குருநாகல் - 037 222 2261/ 62

• தலசீமியா மத்திய நிலையம், அனுராதபுரம் - 025 222 2261

• தலசீமியா மத்திய நிலையம், பதுளை - 055 222 2261

More to read

MedTalks

© 2026 MedTalks. All rights reserved.
Health simplified your way